சர்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை வரலட்சுமிக்கு வைத்துள்ளதால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், அது ஜெயலலிதாவின் பெயர் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
’’நடிகர்களுக்கு இப்போது பேஷன் ஆகிவிட்டது. அம்மா(ஜெயலலிதா) இல்லாததால் ரொம்ப குளிர் விட்டு போய்விட்டது. அதுதான் முக்கியம். அம்மா இருக்கும்போது இது மாதிரி படங்களில் கருத்து வந்ததா? இவர்கள் எல்லாம் அம்மா இருக்கும்போதே இப்படி படம் எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சியிருப்போம். மக்களுக்கு நல்லது செய்யறது மாதிரியான கேரக்டரில் நடிக்க ஒவ்வொரு நடிகருக்கும் ஆசை இருக்கும். அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது வேறு. முதலமைச்சர் கனவிலும் நடிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களின் கொள்கைகளை சொல்லி நடிக்கலாம். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து, சிதைத்து, இது மாதிரியான கீழ்த்தரமான செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்ட அமைச்சர் சிவி.சண்முகம் கூறியது போல திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லுகின்ற சாதனமாக இருக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் மாதிரி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இவர்கள் தலைகீழ் நின்றாலும் எம்.ஜி.ஆர். மாதிரி வரமுடியாது. சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்ற காரணத்தினால் திரைப்படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்.
இழிவுபடுத்த வேண்டுமென்றே மறைந்த முதல்வர் பற்றி காட்சிகளை வைத்துள்ளனர். அம்மாவின் பெயர் கோமளவல்லியா? இல்லையா? என்படு வேறு. அவரின் பெயர் என்று சொல்லப்படுகின்ற நேரத்திலே, எத்தனையோ பெயர் இருக்கும்போது அந்த பெயரை வைத்தது காழ்ப்புணர்ச்சியின் காரணம்தான். மனதை புண்படுத்துகின்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது’’என்று தெரிவித்துள்ளார்.