கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
விஜயதாரணி 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாகவும் அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்ததாகவும், ஆனால் சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று (24-02-24) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (பக்கத்தில்) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்பு பேசிய ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. அதில் ராகுல் காந்தி, ‘எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்’ என்று கூறியுள்ளார்.
எதற்க்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது.
பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்.
- திரு @RahulGandhi pic.twitter.com/vKtwCx0EWu— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 24, 2024