வாக்களர்களுக்கு கொடுத்துவந்த மோடி படத்துடன்கூடிய தங்க நாணயங்களும், லட்சக் கணக்கான பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்திருப்பது புதுவை மாநில தேர்தல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜி.என்.எஸ். ராஜசேகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் சீட்டு கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சரான சிவா சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கிடையில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட தருபாரனியம் என்பவர் கடைசி நேரத்தில் பாஜகவில் ஐக்கியமானார்.
மும்முனை போட்டியாக இருந்த திருநள்ளாறு தொகுதியில், மக்கள் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனுக்கு செக் வைக்கும் விதமா பாஜக வேட்பாளரான ஜி.என்.எஸ். ராஜசேகரன் மோடி படம் போட்ட கவரில் தங்க காயின், இரண்டாயிரம் பணம் என முப்பதாயிரம் வாக்காளர்களுக்கு குறிவைத்து கொடுத்துவந்துள்ளார். இது தேர்தல் பறக்கும்படைக்கு தெரியவந்து வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த 96 ஆயிரம் பணத்தையும், 149 தங்க காயினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து திருநள்ளாறு பொதுமக்களிடம் விசாரித்தோம், "அமைச்சர் கமலக்கண்ணன் மீது எங்களுக்குப் பெரிய வெறுப்பு எல்லாம் கிடையாது. அவரால் முடிந்ததை செய்துகொடுத்துள்ளார். காங்கிரசையும், அமைச்சரையும் செயல்பட விடாமல் பாஜக முகமாகவே இருந்த ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு பாண்டிச்சேரி மாநிலத்தையே முடக்கிவிட்டனர். இது பாண்டிச்சேரி மொத்த மக்களுக்குமே தெரியும். அதேபோல சுயேச்சையாக போட்டியிடும் சிவா நான்கரை ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலைகாட்டாமல், பெங்களூருவில் இருந்துவிட்டு தேர்தலுக்காக வந்திருக்கிறார். அதேபோல ஜி.என்.எஸ்.ராஜசேகரனும் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்தவர் கிடையாது. நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்தவர். தொகுதி மாறி போட்டியிடுகிறார். ராஜசேகரன் சாதாரண ஆளில்லை புதுவை அரசின் ஓராண்டு பட்ஜெட் ரூ.8,000 கோடி என்றால் இவருடைய சொத்து மதிப்பீடு 80 ஆயிரம் கோடி, அப்படிப்பட்ட கோடிஸ்வரர் சாதாரண அடிதட்டு மக்கள் வாழுகின்ற தொகுதியில் போட்டியிடுவதே பெரிய உள்நோக்கம் தான்.
இவர், எம்,எல்,ஏ ஆனால் பொதுமக்கள் அவரை நெருங்கிட முடியுமா. அவர் பணத்தால் வெற்றிபெற்றுவிடலாம் என்கிற திட்டத்தோடு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 80 சதவிகித வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் பணம், தங்க நாணயம், கொடுத்துவிட்டார். எஞ்சிய நாணயத்தை மட்டுமே பிடித்துள்ளனர். அவரது செல்வாக்கு மேல்தட்டு மக்களுக்கு பயன்படுமே தவிர தொகுதியில் நிரம்ப இருக்கு அடிதட்டு, சிறுபாண்மை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது" என்கிறார்கள்.