நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாள்தோறும் நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக எம்.பி. அப்துல்லா மாநிலங்களவையில் நேற்று உரையாற்றினார்.
அப்துல்லா உரையைத் தொடங்கும் முன் தமிழில் பழமொழி கூறி உரையைத் தொடங்கப் போவதாகக் கூறினார். தொடர்ந்து, “ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க” என்றார். அப்துல்லா பேசிக்கொண்டு இருக்கும் போது குறுக்கிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “கழுதையில்லை ஆடு என்று வரும்” என்றார். இதற்கு பதில் அளித்த அப்துல்லா, “புதுக்கோட்டையில் ஆடு என்று இருக்கும் திருச்சியில் கழுதை தான்” என்றார். மீண்டும் குறுக்கிட்ட நிதியமைச்சர் “ஊருக்கு ஊர் மாறாது அனைத்து ஊரிலும் ஆடுதான்” என்றார்.
உடனே எம்.பி. அப்துல்லா “உங்கள் விருப்பப்படி ஆடு என்றே வைத்துக்கொள்வோம்” எனக் கூறி உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், “2014 மற்றும் 2019ல் இந்த மத்திய அரசு அமைந்தபோது மக்கள் இந்த அரசை அமேஸிங் கவர்ன்மெண்ட் என நினைத்தனர். ஆனால் இறுதியில் பார்க்கும் போது அனைத்தையும் விற்கும் அமேசான் கவர்ன்மெண்ட் என்பது தெரிந்தது. எனவே தான் நான் இந்த விளக்கத்தை கூறினேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “வேலையில்லாத் திண்டாட்டம் வரலாற்றில் இல்லாத அளவு உள்ளது. 2016 ஆம் ஆண்டை விட 2022 டிசம்பர் இறுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசிடம் எவ்வித முன்னேற்றத் திட்டமும் இல்லை” என எம்.பி. அப்துல்லா ஆளும் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.