“நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை வெல்வது மட்டுமே நம் ஒரே ஒரு இலக்காக இருக்கிறது” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்னும் 9 மாதத்தில் நடக்க இருக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியை வெல்வது மட்டுமே நம் ஒரே ஒரு இலக்காக இருக்கிறது. தமிழகத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்றில் இருந்து காய்ச்சல் வந்துவிட்டது. அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்று தெரிந்ததும் சேலத்தில் காய்ச்சல் தொடங்கிவிட்டது. அமித்ஷா வரும் போது லைட்டை ஆஃப் செய்யலாம். தொண்டர்களின் உற்சாகத்தை எப்போதும் ஆஃப் செய்ய முடியாது. 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து குறைந்த பட்சம் 25 எம்.பிக்கள் செல்வார்கள்” என்றார்.