ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தநிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட விரும்புவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.