கொத்துக் கொத்தாய் உயிர் பலி வாங்கும் கரோனாவின் சங்கிலித் தொடரை துண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடமாடும் போது, இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தியும், பலர் அதை பின்பற்றுவதில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் இடைவெளி பின்பற்றப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்க அனுமதி வழங்கப்படுகிறது.
மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் இன்னமும் மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. கொல்கத்தா நகரில் நடைபாதையில் காய்கறி விற்கும் இடங்களில் மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். இது முதல்வர் மம்தா பானர்ஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக களத்திற்கு வந்த அவர், "ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் முன்பாக குறிப்பிட்ட இடைவெளியில் செங்கலால் வட்டமிட்டதோடு, அந்த வட்டத்திற்குள் நிற்பவர்களுக்கு மட்டுமே காய்கறி வழங்க வேண்டும்" என அறிவுரை வழங்கிச் சென்றார்.
தமிழகத்தில் இன்னமும் மக்கள் கரோனாவின் விபரீதம் தெரியாமல் தெருக்களில் சுற்றுவதும், காய்கறி கடைகளில் கூட்டமாக நிற்பதும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார் காவல்துறை நண்பர். அவரே தொடர்ந்து, "சென்னை தியாகராயநகர் காய்கறி சந்தையில் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க கோடு போட்டுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்கிறார்.
சண்டிகரில் எரிவாயு வினியோகம் செய்யும் மையத்தில், குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து இடங்களிலும் இடைவெளியை பின்பற்றினால் கரோனாவை நாம் வெல்லலாம். இல்லையெனில் கரோனா நம்மை கொல்லும்.!