அதிமுக துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அக்கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கட்சி துவங்கி தற்போது வரை 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. இன்றைக்கு அதிமுக பிளவுபட்டு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் சொல்லுகிறார். ஆனால் நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை நாமக்கல்லில் நடக்கும் பொதுக்கூட்டம் காட்சி அளிக்கிறது. ஜெயலலிதா நமக்கு கொடுத்துச் சென்ற ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக ஓட்டு போட்டவர் தான் ஓபிஎஸ்.
அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை நாம் கொடுத்தோம். அதை எல்லாம் மறந்து அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவரை நாம் என்னவென்று சொல்லுவது. நேரடியாக அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத கட்சி திமுக.
காற்றை எப்படி தடை போட முடியாதோ அதை போல் அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடை போட முடியாது. அதிமுகவிற்கு எந்த அளவிற்கு மக்கள் சக்தி இருக்கிறது என்பதை இந்த கூட்டம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதில் அதிமுக வெல்லும். நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.
நாமக்கல்லில் நடக்கும் இந்த கூட்டம் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிள்ளையார் சுழி போடுகின்ற கூட்டமாக இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டி போட்டாலும் கழகத்தின் சார்பில் வெற்றி பெறுவார்கள்” எனக் கூறினார்.