புதுச்சேரியிலுள்ள புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘சமத்துவப் பெரியார் கலைஞர்’ எனும் அறக்கட்டளையை நிறுவுவதற்கென ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து. ரவிக்குமார் அந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இரா. சம்பத் அவர்களிடம் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஒரு நாளில், இந்த அறக்கட்டளையின் சொற்பொழிவு நடைபெறும். செவ்வியல் காலத் தமிழ்ச் சமூகத்தில் சமத்துவம் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் ஆய்வறிஞர்கள் உரை நிகழ்த்துவார்கள். அந்த உரை நிகழ்வு நடைபெறும் நாளிலேயே நூலாக வெளியிடப்படும். உரை தமிழ் / ஆங்கிலம் என இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமையும்.
இந்த அறக்கட்டளையின் துவக்கச் சொற்பொழிவு நிகழ்வு அடுத்த மாதம் அக்டோபரில் நடக்கிறது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார் ' தி இந்து ' ஆங்கில நாளேட்டின் ரீடர்ஸ் எடிட்டரும், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருப்பவருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.