Skip to main content

''953 கோடியில் ஒரு ரூபாயை கூட செலவு செய்யவில்லை; உலக அளவில் தலைகுனிவு'' - திருமாவளவன் எம்.பி பேட்டி

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அண்மையில் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு தொடர்வண்டி கோர விபத்தை சந்திக்க நேர்ந்தது. இது இந்திய தேசம் மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கி இருக்கிறது. 275 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு மேலானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இந்த கோர விபத்துக்கு ரயில்வே துறை மற்றும் இந்திய ஒன்றிய அரசின் அலட்சியமான போக்குகள் தான் காரணம் என்று அந்த துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் பொதுமேலாளர் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சொல்லுகிறார். சிஏஜி என்கிற அகில இந்திய தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அது ஆட்சியாளர்களால் குறிப்பாக அமைச்சகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தணிக்கையாளர் அறிக்கையின்படி ஒன்றிய அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே துறை அமைச்சர் பதவி விலகி முழுமையான விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு விபத்தை இந்திய தேசம் சந்தித்திருப்பது உலக அரங்கில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது விபத்தை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ஆட்சிக் காலத்தில் 'கவாச் ஸ்கீம்' என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்தை கூட அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அண்மையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தபோது இந்த பாதுகாப்பு திட்டத்திற்கு என்று கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 953 கோடி., அதில் ஒரு ரூபாய் கூட எடுத்து அவர்கள் செலவு செய்யவில்லை என்று தெரிகிறது. 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடுவதற்கு மந்திரி பதவி கொடுக்கிறார் மோடி. இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் வெளிப்படையாக அச்சுறுத்துபவர்களுக்கு மந்திரி பதவி தரப்படுகிறது. மத வெறியர்களுக்கும் சாதி வெறியர்களுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம்; வெறுப்பு அரசியலுக்கு தருகின்ற முக்கியத்துவம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு அளிப்பதில்லை என்பதை இந்த சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த விபத்து குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை பிரதமர் வெளியிட வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்