கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று துவங்கியது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக 9 முறை எம்எல்ஏ-வாக இருந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாள் நடைபெறும்.
இந்நிலையில் கர்நாடக சட்டப் பேரவையில் மாநில சபாநாயகராக ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த யூ.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ.வான காதர், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கான் மற்றும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் சட்டசபை செயலர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இப்பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை சபாநாயகராக யூ.டி.காதர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்லாமியர் ஒருவர் கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை. கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சித் துணைத்தலைவராக யூ.டி.காதர் செயல்பட்டார். 2013 ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் காதர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 2018 ஆம் ஆண்டு காங்-ஜனதா கூட்டணி ஆட்சியில் காதர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை என இரு துறைகளின் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.