தமிழகத்தில் அண்மையில் விதிக்கப்பட்டவரிகளுக்கெல்லாம் காரணமே பழனிவேல் தியாகராஜன் தான் என செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''இதே திமுக கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே ஓய்வூதிய பென்ஷன், முதியோர் பென்ஷன், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கிற பணம் போதுமானது அல்ல, நிறைய பேர் விடுபட்டிருக்கு, எங்கள் ஆட்சியில் கொடுத்ததை எல்லாம் இவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்று குற்றம்சாட்டி பலமுறை சட்டமன்றத்தில் பேசினார்கள். அப்பொழுது நிதியமைச்சர் மாங்கா பிடுங்கி கொண்டிருந்தாரா? சட்டமன்றத்தில் தானே இருந்தார். இன்றைக்கு உரியவர்களுக்குதான் கொடுக்கப்படுகிறது. அதிகாரிகள் கீழே இருக்கிற வில்லேஜ் ஆபீஸிலிருந்து, அந்த துறை அதிகாரிகள் என அனைவரும் பார்த்து அறிந்து யார் தகுதியானவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுதான் கொடுக்கப்படுகிறது.
இதுபோன்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிவிட்டு போவது அமைச்சருக்கு அழகல்ல, அதுவும் நிதியமைச்சருக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் நான் பொறுப்பு வகித்த கூட்டுறவுத்துறையில் முறை தவறி 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்கிறார். இதை நிரூபித்து விட்டால் நான் நிச்சயமாக அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். இல்லையென்றால் நிதியமைச்சர் விலகிக் கொள்ள தயாரா? நிதியமைச்சராக இருப்பதற்கு தகுதியே இல்லாத ஒரு ஆளை திமுக நிதியமைச்சராக போட்டு மக்களுக்கு வரி மேல் வரி விதித்து வருகிறது. இந்த வரிகளுக்கெல்லாம் காரணமே பழனிவேல் தியாகராஜன்தான். அவர்தான் முழுக்க முழுக்க காரணம். இல்லாதது பொல்லாததை சொல்லி இன்று இந்த அரசு மீது ஒன்றரை வருடத்திலேயே வெறுப்பு வருவதற்கு காரணமே நிதி அமைச்சர் தான்'' என்றார்.