Skip to main content

விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது... ஈ.ஆர். ஈஸ்வரன் எச்சரிக்கை...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
E.R.Eswaran

 

 

டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். விவசாயிகளுடைய மனநிலையையும், உணர்வுகளையும் மத்திய அரசு புரிந்துகொண்டு அமைதியான முறையில் பிரச்சினைகளை பேசி தீர்க்கவில்லை என்றால் நாட்டில் விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு வகையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

 

விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுக்களை வாங்கி மத்தியிலே ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 6 ஆண்டுகளாகியும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல புதிய வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 6 ஆண்டுகளாக பொறுமை காத்து வந்த விவசாயிகள் மத்திய அரசினுடைய கவனத்தை விவசாயிகள் பக்கம் திருப்புவதற்காக டெல்லி நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 'டெல்லி நோக்கி செல்' என்பதை தாரக மந்திரமாக வைத்து பல தடைகளையும் மீறி டெல்லிக்குள் ஊடுருவிக் கொண்டு இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலமாக அதை தீர்ப்பதற்கு பதிலாக அடக்குமுறை மூலமாக முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு மத்திய அரசு களமிறங்கி இருக்கிறது. 

 

ஜனநாயக முறைப்படி விவசாயிகளுடைய போராட்ட கோரிக்கைகளை மத்திய அரசு அணுக வேண்டும். அடக்குமுறை மூலமாக என்றைக்குமே விவசாய போராட்டங்களை அடக்கிவிட முடியாது. ஆனால் தமிழக விவசாயிகள் 100 நாட்கள் போராட்டம் செய்த போதும் சந்திக்க மறுத்தவர்தான் பாரத பிரதமர். 

 

டெல்லி காவல்துறையும், துணை ராணுவமும் போராடும் விவசாயிகளை அடக்குவதற்காக நடத்தி கொண்டிருக்கின்ற சர்வாதிகாரதனத்தை தொலைக்காட்சிகள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அனைத்து மாநில விவசாய சங்கங்களும் கண்டித்திருக்கிறார்கள். டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதித்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமாக தீர்வு காண மத்திய அரசு முன் வர வேண்டும். அதைவிட்டு அடக்குமுறை மூலமாக விவசாயிகளை பயமுறுத்துவது தொடர்ந்தால் போராட்டம் அதி தீவிரமடையும். 

 

இந்தியா முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லி நோக்கி வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராகி கொண்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

 

விவசாயிகளுடைய மனநிலையையும், உணர்வுகளையும் மத்திய அரசு புரிந்துகொண்டு அமைதியான முறையில் பிரச்சினைகளை பேசி தீர்க்கவில்லை என்றால் நாட்டில் விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசுகளும் விவசாயிகளுடைய எதிர்ப்புக்கு ஆளாகி பாதிப்பை சந்திப்பார்கள்'' என எச்சரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்