முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் பெயரிலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் அவருக்கு தொடர்பான 30 இடங்களில் செய்த சோதனைகளில் 26,52,660 ரூபாயும், 1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும், நான்கு சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் நடந்த இந்த சோதனைக்கு அரசியல் பழிவாங்கும் எண்ணமே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சோதனை அடிப்படையில் ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என வேண்டும் என்றே இந்த திமுக அரசு இன்றைய தினம் சோதனை நடத்தி உள்ளது. அதிமுக உறுப்பினர்களை ஒவ்வொருவராக இப்படி சோதனை செய்கின்ற பொழுது ஏதோ இயக்கத்தை முடக்கிவிடலாம் என நினைக்கின்றார்கள். இதனால் தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் இதைவிட இன்னும் வேகமாக பணியாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம்" என்று கூறியுள்ளார். சமீப காலமாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.