நேற்று தேனியில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு புதிதாக வாக்குப்பதிவு பெட்டிகள் வந்திறங்கின. இதைத்தொடர்ந்து அங்கிருந்த எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பானது.
நேற்றிரவு 8 மணிக்கு தேனிக்கு 50 வாக்குப்பதிவு பெட்டிகள் வந்திறங்கின. இதைப்பார்த்தவர்கள் அரசியல் கட்சிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்குவந்த எதிர்கட்சிக்காரர்கள் வாக்குப்பெட்டியை மாற்றப்பார்க்கிறார்கள் என நினைத்து தாலுகா ஊழியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் தேனியில் வாக்குப்பெட்டியை மாற்றப்பார்க்கிறார்கள் என்ற வதந்தியும் பரவியது.
இதனால் எதிர்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அங்குவந்த தலைமை தேர்தல் அதிகாரி நீங்கள் நினைக்கும்படி, பெட்டியை மாற்றுவதற்காக இது கொண்டுவரப்படவில்லை. தேவை இருப்பதால்தான் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறினார். இதைத் தொடர்ந்து அங்குவந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியது, ‘‘பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓர் இடத்தில் இருந்து, தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான். தேவை கருதியே அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மற்றும் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து தேனிக்கும், 20 விவிபாட் இயந்திரங்கள் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளன. ஒருவேளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அப்போது தேவைப்படும் அதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது எனக்கூறியுள்ளார்.
இன்று காலை தேனி நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்ப எடுத்துச்செல்ல உத்தரவிடுமாறு கூறி மனு அளித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.