கடந்த ஒரு வாரமாக எந்தச் சேனலைத் திருப்பினாலும் 2021-ல் அதிசயம் நடக்கும், அற்புதம் நடக்கும் என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியும், கமலும் மாற்றி மாற்றி இணைந்து செயல்படுவோம் என்று கூறிவருகின்றனர். அதன் அடிப்படையில் தான் 2021 தேர்தலில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி கூறிவருகிறார். ஆனால், இரண்டு பேரும் சேர்ந்து இன்னும் பேட்டி கொடுக்கவில்லை என்ற கேள்வியும் வருகிறது. இதற்கிடையிலே கமலின் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள நடிகை ஸ்ரீப்ரியா, முதல்வர் வேட்பாளர் கமல்தான் என்று சொல்ல, அது ஒரு பக்கம் விவாதத்தை ஏற்படுத்திவிட்டது. ரஜினிகிட்ட கட்சி ஆரம்பிக்கிறது பற்றிக் கேட்டாலும், இணைந்து செயல்படுவது பற்றிக் கேட்டாலும், முதல்வர் வேட்பாளர் பற்றிக் கேட்டாலும் திரும்பத் திரும்பச் சொல்வது தேர்தல் வரும்போது தெரியும் என்று தான். ஆனால், அதிசயம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ரஜினி-கமல் பற்றி அ,தி.மு.க.வில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லாரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், தி.மு.க. சைலன்ட்டா இருக்கு என்ற பேச்சும் அடிபடுகிறது. சமீபத்தில் துரைமுருகனிடம் இது பற்றி கேட்ட போது, இணைந்து வந்தால் நல்லதுதானேன்னு கூறியுள்ளார். மற்றபடி தி.மு.க. பெருசாக இந்த சம்பவம் தொடர்பாக ரியாக்ட் பண்ணவில்லை. அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள நிலையில், பா.ஜ.க. தரப்பில் இருந்து தான் ரஜினி-கமல் இணைப்பு பற்றி கிளப்பிவிட்டு, தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு செல்லக்கூடிய வாக்குகளைப் பிரிக்க ப்ளான் பண்ணுறாங்கங்கிற என்ற சந்தேகம் இருக்கிறது என்கின்றனர். அதே நேரத்தில், ரஜினி, கமல் இருவர் மூவ்மெண்ட்டையும் டெல்லி உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர். நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசியல் சூழல்கள் எப்படி இருக்கு என்று தெரிந்து கொண்டு தான் சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இணைவார்கள் என்று கூறுகின்றனர். அதுவரைக்கும் வெயிட்டிங் தான் என்று இருதரப்பிலும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.