நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைகிறது. இந்நிலையில், ஆறு மாவட்டங்களில் திமுக கூட்டணி முழு தொகுதிகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.
அதில் ஒன்று திருச்சி மாவட்டம். மணப்பாறை, திருவரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளை உள்ளடக்கியது இம்மாவட்டம். இதில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை தோற்கடித்தார்.
இந்நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது தொகுதி மக்களுக்கும் திமுக தலைமைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் கே.என். சேகரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பெல் தொ.மு.ச நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் நன்றி.
திமுக ஆட்சி மலர வேண்டும் என்று என் மீது நம்பிக்கை வைத்து 1,05,424 வாக்குகளை அளித்து, மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த உங்களுக்காக, உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளித்து, எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காளர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.