தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தான் தேனி தொகுதியில் போட்டியிட்டது தவறு என்று வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தேனி நடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட இளங்கோவனும் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான நடவடிக்கையே காரணம் என்று கூறினார். மேலும் தேனி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றார். ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்து ரூ.200 கோடி வரை செலவு செய்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும், எனது சொந்த ஊரான ஈரோட்டில் சீட் கிடைக்காததால் தேனியில் போட்டியிட்டேன். நான் சொந்த ஊரில் சீட் கிடைக்காததும் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தேனிக்கு சென்று தவறு செய்துவிட்டேன் என பேசினார்.