தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்களைச் சந்திப்பதற்காக சசிகலா கடந்த 4 ஆம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள். பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்'' என்றார். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்திருந்த நிலையில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது. ஓ.ராஜாவோடு சசிகலாவை சந்திக்க சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி என்ற மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதற்கு முன்பே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த பல அதிமுக பொறுப்பாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தம்பி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா? அல்லது தற்போதைய அதிமுக தலைமை என்ன முடிவெடுக்க இருக்கிறது என்ற கேள்விகள் மேலோங்கி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''மதுரை மாநகராட்சியில் பரவை பேரூராட்சியை கைப்பற்றியிருக்கிறோம். 8 பேரில் 6 பேர்தான் திமுக, ஒரு சுயேச்சை. அதையும்கூட அதிகார பலத்தால் பறித்துவிட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் இடங்கொடுக்காமல் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் சென்று கழகத்தின் கொள்கைப் பிடிப்போடு பரவை பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட்டோம். சசிகலா விவகாரம் குறித்து பலமுறை சொல்லிவிட்டோம். எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவுதானே தவிர எங்களைப் போன்ற ஆளுங்க எல்லாம் இதற்கு பதில் சொல்றதுக்கு இல்ல...தலைவர்கள் எடுக்கும் முடிவுதான்'' என்றார்.