அதிமுகவை உடைக்க நினைக்கும் சசிகலாவின் திட்டம் பலிக்காது என்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, “அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடன் பேசும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் இது, துரோகிகளுக்கு கட்சியில் என்றுமே இடமில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 75 இடங்கள் கிடைத்தது. சில சதிகாரர்களால் வாக்குகள் பிரிந்தன. இதன் காரணமாகவே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இது தற்காலிக சரிவுதான். அதர்மத்தை தோற்கடித்து தர்மம் மீண்டும் வெல்லும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதிமுக மக்கள் சக்தியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். அனைத்து சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்லும் என்பார்கள். அதுபோல அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் படையும் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் செல்வார்கள். இந்தப் படைக்கு சசிகலா சதி செய்ய நினைக்கிறார், அது ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் மோடியை அவர் சந்தித்தபோது நீட் தேர்வு ரத்து குறித்து எதுவும் பேசவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. தமிழகத்தில் ஊரடங்கு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அறிவிக்கப்படாத மின்தடை நிலவிவருகிறது” என்று கூறினார். இக்கூட்டத்தில் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன், கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராஜ்மோகன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி அபிராமி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மருதராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.