நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.