சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் சாலை எனப் பெயர் மாற்றம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு ஆகியோர் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலுவிடம், ஈ.சி.ஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் சாலை எனப் பெயர் மாற்றம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எ.வ.வேலு, "நான் அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. மக்கள் யாரும் குழம்ப மாட்டார்கள். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலை மட்டும்தான் கலைஞரின் திருப்பெயரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலைக்கு கிழக்கு கடற்கரைச்சாலை என்று பெயர் வைத்ததே கலைஞர்தான். அது தொன்றுதொட்டு இருந்த பெயர் அல்ல. கல்வழிச்சாலையாக இருந்ததை செப்பனிட்டு அந்த சாலைக்கு பெயர் வைத்ததே அவர்தான். நெடுஞ்சாலைத்துறை என்று ஒரு துறையை உருவாக்கியதும் அவர்தான். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்தான் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் இது குழப்பமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார்.