ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணி சார்பில் இளங்கோவன், அமமுக சார்பில் சிவபிரசாந்த் அதிமுக ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன், அதிமுக இபிஎஸ் தரப்பில் தென்னரசு பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 96 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. தொடர்ந்து குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் தேர்தலில் இருந்து விலகுவதாக அமமுக அறிவித்தது.
இந்நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வேட்பாளர் செந்தில் முருகனின் 2 மனுக்களும் கட்சி சார்பில் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 121 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இளங்கோவன், தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல் குக்கர் சின்னம் கிடைக்காததால் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக கட்சியின் நலனுக்காக வாபஸ் பெறுவதாகவும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க இருப்பதாகவும் ஓபிஎஸ் கூறிவந்த நிலையில் ஓபிஎஸ் அளித்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் நிகாரித்ததும் குறிப்பிடத்தக்கது.