Skip to main content

சாத்தான்குளம் போன்று அராஜக பாதையில் நெய்வேலி காவல்துறை: ஈஸ்வரன் கண்டனம்

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
E.R.Eswaran

 

இன்னும் எத்தனை பெண்களின் தாலியை தமிழக காவல்துறை அறுக்க போகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரை சேர்ந்த செல்வமுருகன் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். 

 

நெய்வேலி நகர காவல்துறையினரால் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை இது. தமிழகத்தில் சில மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கைதிகளை அடித்து துன்புறுத்தி வருவதும், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் தொடர்கதையாகிவிட்டது. 

 

சாத்தான்குளம் சம்பவம் போலவே தற்போது நெய்வேலி நகர காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி வியாபார விஷயமாக வடலூர் சென்ற செல்வமுருகன் சந்தேகத்தின்பேரில் நெய்வேலி நகர காவல்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். 

 

இந்த விஷயம் செல்வமுருகன் மனைவிக்கு காவல்துறையால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெய்வேலி நகர போலீசார் செல்வமுருகனை விடுவிக்க நகை, பணம் வேண்டுமென்று செல்வமுருகன் மனைவியிடம் கேட்டதாகவும், அதை தர மறுத்தால் பல பொய் வழக்குகளை போட்டு செல்வமுருகனை சிறைக்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் அவரது மனைவி பிரேமா கூறியிருக்கிறார். 

 

ஒருவரை சந்தேகத்தின்பேரில் காவல்நிலையம் அழைத்து வந்து சம்பந்தப்பட்ட நபரின் மனைவியிடம் நகையும், பணமும் காவல்துறையினர் கேட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்நிலையத்தில் செல்வமுருகனை பலமாக அடித்து துன்புறுத்தி விருத்தாசலம் கிளை சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.  

 

இந்த தகவலை அறிந்து கடந்த 2-ஆம் தேதி சிறைக்கு சென்று செல்வமுருகனை பார்த்த அவரது மனைவி, செல்வமுருகன் உணவு கூட சாப்பிட முடியாத நிலையில் இருந்ததாகவும், அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி  சென்று சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் சிறைத்துறை செல்வமுருகனை சிகிச்சை பெறவிடாமல் மீண்டும் சிறைக்கே அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறி இருக்கிறார். 

 

தன்னுடைய கணவரை காவல்துறையின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியாமல் ஒரு பெண் தவியாய் தவித்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் 4-ஆம் தேதி இரவு செல்வமுருகன் இறந்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் அவரது மனைவி நிற்கதியாய் நிற்கிறார். காவல்துறையின் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகத்தால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

 

நெய்வேலி நகர காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் நிகழ்வின் போதே தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிருந்தால் இதுபோன்ற நிகழ்வு நெய்வேலியில் நடந்திருக்காது. 


தனது கணவனின் இறப்புக்கு நீதி கேட்கும் பெண்ணுக்கு தமிழக அரசின் பதில் என்ன ?. இன்னும் எத்தனை பெண்களின் தாலியை தமிழக காவல்துறை அறுக்க போகிறது. தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்