ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி இன்று (17/03/2021) தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டி, செம்மாம்பாளையம், கைகாட்டிவலசு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து, 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது, குடிநீர்ப் பிரச்சனை, கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி கூறியதோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்குமாறு வேட்பாளரிடம் கேட்டுக்கொண்டனர். பின்னர், பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் சு.முத்துசாமி, "தி.மு.க. தலைவர் அறிவித்துள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், சீர் செய்யப்படும். சொத்துவரி அதிகரிக்கப்படாது. கரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 4,000 வழங்கப்படும். ஊழல் குற்றச்சாட்டு உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். பல தரப்பு மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" என்றார்.
வாக்குச் சேகரிப்பின் போது கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.