"இந்தியாவிலேயே சிறப்பான சுகாதார கட்டமைப்புகளை கொண்ட தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? தமிழக அரசினுடைய கவனக்குறைவான செயல்திட்டங்கள் தான் காரணம்" என கூறியுள்ள கொ.ம.தே.க.பொதுச் செயலாளர் E .R .ஈஸ்வரன் மேலும் விரிவாக அவரது அறிக்கையில்,
"இந்தியாவிலேயே சுகாதார கட்டமைப்புகளை சிறப்பாக கொண்டிருக்கின்ற மாநிலம் தமிழகம். இது இந்திய அரசும் ஒப்புக்கொள்ளும். அனைத்து மாநிலங்களை சார்ந்த சுகாதாரத்துறையும் ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் தமிழகத்தினுடைய சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை பின்பற்றி மற்ற மாநிலங்கள் மீள்வது தான் வழக்கம்.
கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஆபத்தான நேரங்களில் தமிழகத்தினுடைய மருத்துவர்கள் தங்களுடைய சிகிச்சை முறைகளை எடுத்துச் சொல்லி காப்பாற்றியது வரலாறு. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது உண்மை.
பல நாடுகளிலிருந்தும் கூட சிகிச்சைக்காக தமிழகத்திற்கு அதிகமான நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். இப்படியெல்லாம் சிறப்பாக பணியாற்றுகின்ற மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் கொண்டிருப்பது தமிழ்நாடு. இப்போதும் அரசு மருத்துவர்களும், தனியார் மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற ஊழியர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
சுகாதாரத் துறையை நிர்வகிப்பதில் இன்றைக்கு இருக்கின்ற குழப்பம்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு திடமான முடிவுகளை தேவையான நேரத்தில் எடுக்காதது தான் கொரோனா கட்டுப்பாட்டில் அரசின் தோல்விக்கு காரணம். சில செயல்பாடுகளை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எங்கள் கேள்வி களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த அரசுக்கும் முன்பாக வைக்கிறோம்....,
1. முழு ஊரடங்கை மார்ச் மாதத்தில் முதல் முதலாக அறிவித்தபோது சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்பவர்களுக்கு தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெருந்திரளான கூட்டத்தை கூட்டியது.
2. திருமணத்திற்கு 30 பேர், இறப்பிற்கு 20 பேர் என்ற கட்டுப்பாடுகளை விதித்து விட்டு லட்சக்கணக்கானோர் கூடுகின்ற கோயம்பேடு சந்தையை மூடாமல் இருந்தது.
3. சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஊரடங்குக்குள் ஊரடங்கை திடீரென்று அறிவித்து ஒரே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் லட்சக்கணக்கானோர் கூடுவதற்கு காரணமாக இருந்தது.
4. ஒவ்வொரு தமிழனுடைய உயிரும் முக்கியம் என்று அறிவித்த முதலமைச்சர் அதிலிருந்து பின்வாங்கி கோயிலை கூட திறக்காமல் டாஸ்மாக் கடைகளை திறந்தது.
5. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 19 ஆம் தேதி முழு ஊரடங்கை அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பே சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளையும் அடைத்து அனுமதி இல்லாமல் மக்கள் சென்னையிலிருந்து செல்ல முடியாது என்பதை எல்லோருக்கும் தெரியும்படி அறிவிக்காதது. இதனால் லட்சக்கணக்கான பேர் சென்னையிலிருந்து எல்லா மாவட்டங்களுக்கும் சென்றடைந்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது.
6. அரசினுடைய கொரோனா சம்பந்தப்பட்ட அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது.
7. சமூக பரவலாக மாறி இருக்கின்ற கொரோனா பாதிப்பை அரசு ஒப்புக்கொள்ளாமல் அதற்கான தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது.
8. யார் சொல்லியும் கேட்காமல் டாஸ்மாக் கடைகளை திறந்ததன் மூலம் அரசு அதிகாரிகள், மருத்துவர்களுடைய அர்ப்பணிப்பான பணிகளிலே தொய்வை ஏற்படுத்தியது.
9.அமைச்சர்களும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு நிவாரணம் மற்றும் திறப்பு விழாக்கள் என்ற பெயரில் அரசு நிகழ்ச்சிகளை கூட்டத்தை கூட்டி நடத்திக் கொண்டிருப்பது.
10. ஆரம்பத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த போது அரசு அந்த திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது, இப்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் போது ஆண்டவனால் தான் கட்டுப்படுத்த முடியும் என்று கையை விரித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பது.
11. சென்னையில் செய்வதற்கு இணையாக மற்ற மாவட்டங்களில் தேவையான அளவு பரிசோதனைகளை செய்யாமல் இருப்பது.
12. மூன்று மாதங்கள் கழித்து சுகாதாரத்துறை செயலாளர் திருமதி.பீலா ராஜேஷ் அவர்களுடைய செயல்பாடுகளும், திட்டமிடலும் சரி இல்லை என்ற முடிவுக்கு வந்தது.
தமிழக ஆட்சியாளர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை கைவிட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது." என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.