தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேலம் மாவட்டம் உள்ள முதலாவது மண்டலத்தில் சேர்த்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.
கரோனா நோய்ப் பரவல் காரணமாக முடக்கப்பட்ட பொது போக்குவரத்தை தமிழக அரசு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து இன்று முதல் தடை நீக்கி அறிவிக்கப்பட்ட மண்டலங்களில் மட்டும் பொதுப் போக்குவரத்தை ஆரம்பித்திருக்கிறது.
ஒரு மண்டலத்தில் உள்ள மாவட்டத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தில் உள்ள மாவட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்றும், ஒரு மண்டலத்தில் உள்ள மாவட்டத்திற்குள் மட்டுமே பொதுப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் சேலம் மாவட்டத்திற்குத் தான் வந்து செல்ல வேண்டியிருக்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இரண்டும் சேலம் மாவட்டத்தில் இருந்துதான் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.
இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் சேலம் மாவட்டத்திற்கு அத்தியாவசியத் தேவைகளுக்காக அடிக்கடி வந்து செல்ல கூடியவர்களாக இருக்கிறார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேலம் மாவட்டம் உள்ள மண்டலத்தோடு இணைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பிரித்து அறிவித்துள்ள மண்டலங்களின் படி சேலம் மாவட்டம் முதலாவது மண்டலத்திலும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இரண்டாம் மண்டலத்திலும் உள்ளது.
இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சேலத்திற்கு வர வேண்டுமென்றால் இ-பாஸ் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களுக்கு இ-பாஸ் வழங்குவது என்பது இயலாத காரியம். மக்களும் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக சேலத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் போக்குவரத்து அவசியமாகிறது. எனவே சேலம் மாவட்டம் உள்ள முதலாவது மண்டலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்த்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.