![eps is talking about it again and again Minister Geethajeevan](http://image.nakkheeran.in/cdn/farfuture/XLXsxFm5M6mizUJwB4i92Lmv9191KNZYl_Ygd50J1D0/1735314718/sites/default/files/inline-images/geetha-jeevan-art-pm.jpg)
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் எத்தனையோ குற்றச்செயல்கள் நடைபெற்றது. பொள்ளாச்சி குற்றநிகழ்வு ஒன்றே அந்த பொல்லாத ஆட்சிக்கு சான்று. வழக்கே தொடுக்கவில்லை, புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டார்கள். திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்திய பின்னர் தான் மத்திய புலன் விசாரணை நடைபெற்றது.
அதிமுக நிர்வாகிகளே அந்த வழக்கில் சமந்தப்பட்டு இருந்தார்கள், கட்சிக்காரர்களை பாதுகாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. ஆனால் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை வழக்கில் 3 மணி நேரத்தில், சம்பந்தப்பட்டவர் கைது செய்யபட்டார். இனி அவருக்கு தகுந்த தண்டனை வாங்கி தரப்படும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடுமில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். வெறும் வாயை மென்றுக் கொண்டிருந்த அதிமுகவும், பாஜகவும் இந்த ஒரு வழக்கு கிடைத்ததும் அவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தூத்துக்குடி தூப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்க்கேடு, அப்படி நிர்வாகம் செய்தவர் எல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை கேள்வி கேட்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை கூற நேரம் போதாது. அப்படி ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். பாஜக தலைவரோ செய்தியாளர்களை அழைத்து வித்தை காண்பித்து கொண்டு இருக்கிறார். குழந்தைகளுக்கு வித்தை காண்பிப்பது போல கயிற்றால் அடித்து கொண்டு செய்தியாளர்களுக்கு வித்தை காண்பித்தார். குற்றச்செயல் செய்த ஞானசேகர் திமுக என கூறுகின்றனர். ஆனால் அவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை. சைதை பகுதி திமுக பொறுப்பில் இருப்பவர் டி. ஞானசேகர். அவர் வேறு என நாங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டோம். அதிமுக ஆட்சியில் நடந்த பாலியல் குற்றங்கள் சிலவற்றை கூறுகிறேன். சென்னை போரூரில் 2017ல், 6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
மாமல்லபுரம் அருகே ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை இருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை. காஞ்சிபுரத்தில் அணைக்கட்டில் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை. தூத்துக்குடியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை. இப்படி அடுக்கிக்கொண்டே போலாம். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் உடனடியாக அனைத்து வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி, கடந்த, 24ஆம் தேதி நடந்த நிகழ்வுக்கு 27ஆம் தேதி நான்கு மணிக்கு பேசுகிறார். அத்தனை விளக்கங்களும் கொடுத்த பிறகும் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.