தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று கடலூர் வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத், பண்ருட்டி அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி பாமக வேட்பாளர் கோ.ஜெகன், குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம், புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், விருத்தாச்சலம் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திட்டக்குடி பா.ஜ.க வேட்பாளர் து.பெரியசாமி ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: “அ.தி.மு.க கூட்டணி உழைக்கும் கூட்டணி, உழைப்பதற்கு பிறந்தவர்கள் வெயில் என்று பாராமல் பாடுபவர்கள். தி.மு.க கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, ஆனால் அ.தி.மு.க கூட்டணி வளர்ச்சிக்கு பாடுபடும் கூட்டணி. மு.க.ஸ்டாலின் பொய் பேசுவதில் கைதேர்ந்தவர், அதில் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம். மூட்டை மூட்டையாக பொய் பேசுவார்.நான் ஒரு விவசாயி கஷ்டப்பட்டு பதவிக்கு வந்தவன். வெயில் மழை என்று பாராமல் விவசாய நிலத்தில் பாடுபட்டு பயிர் செய்தவன். ஆனால் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற செய்ய சொல்லுங்கள்.
வேளாண்மை சட்டம் என்பது தமிழக மக்களுக்கு புரியவில்லை, அந்த சட்டத்தால் இடைத்தரகர்களுக்குதான் தான் பாதிப்பு. இடைத்தரகர்களை தூண்டிவிட்டு பிரச்சனையை பெரிதாக்கின்றனர், அந்த சட்டத்தினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், அதுவே நம்முடைய லட்சியம். விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கி உள்ளோம். பயிர்க் கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்யும். கேபிள் இலவசமாக வழங்கப்படும், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு 1500 வழங்கப்படும், ஆண்டு தோறும் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்டாலின் குடும்பம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வாக்கு வாங்கலாம் என்றும், ஆட்சியை பிடிக்கலாம் என்றும் பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் இப்போது தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு 1500, வாஷிங் மெஷின் போன்ற மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் கிடையாது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படுவது போல் அவர் பேசுவது தவறு. மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும். வண்டிக்கு எவ்வாறு 2' சக்கரங்கள் வேண்டுமோ? அதுபோல தான் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நட்புறவோடு செயல்பட்டால் தான் தமிழகம் வளர்ச்சி அடைய முடியும்.
மேலும் வாக்குறுதிகள், திட்டங்கள் நிறைவேற்ற முடியும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மிக சிறப்பான திட்டம். 80,000 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்தால் விவசாய வளர்ச்சி பெருகுவதோடு, தமிழகமும் வளர்ச்சி பெறும். கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெறும் 6 பேர் மட்டும் தான் தேர்வடைந்தார்கள். ஏழை, எளிய மாணவ மாணவிகள் மருத்துவம் படிப்பதற்காக, எதிர்க்கட்சிகளோ, பொதுமக்கள் கோரிக்கை வைக்காத நிலையிலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவ கணவை நிறைவேற்றும் வகையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு அளித்துள்ளது. இதன் மூலம் 435 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்றார்கள். புதிதாக 11 மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பின்பு, ஆண்டுதோறும் 1650 மருத்துவ மாணவர்கள் பயன்பெற முடியும். அதில் தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 600 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வருடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும். ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நிறைவேற்றியது அதிமுக அரசு. அவர்களது கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்றுக் கொண்டது” இவ்வாறு அவர் பேசினார்.