நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (23.02.2024) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன். கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.
தாய் தமிழ்நாட்டையும் திமுகவையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால் அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள், நிதிநிலை அறிவிப்புகள், மத்திய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும். இந்தியாவைக் காக்க‘இந்தியா’வை வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.