சுதந்திரப் போராட்டத் தியாகியும், உழைப்பாளர் பொதுநலக் கட்சித் தலைவருமான கடலூர் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் திறந்து, வன்னியர் சமுதாய ஆதரவைப் பெறுவதில் முந்தியிருக்கிறார் எடப்பாடி.
மணிமண்டபம் மற்றும் சிலைத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து 25 ந்தேதி துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் புடைசூழ வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி. பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி மட்டுமே வந்திருந்தார். அவரை மேடையில் அமரவைத்து, ராமசாமி படையாச்சியாரைப் புகழ்ந்துபேசிய எடப்பாடி, "ராமதாஸ், ஜி.கே.மணி, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் என்னிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது பரிசீலனையில் உள்ளது. இந்த சமுதாய மக்களுக்காக அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செய்துதரும்'' என்று தெம்பாகப் பேசி முடித்தார்.
மறுநாள், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, கள்ளக்குறிச்சியை 34-வது மாவட்டமாக தொடங்கிவைக்கும் விழாவிற்கும் நேரில் வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி. புதிய மாவட்டம் 13 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரை மக்கள் தொகையாகக் கொண்டது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நகராட்சி, 559 ஊராட்சிகள், 9 ஒன்றியங்கள், ஏழு பேரூராட்சிகளை உள்ளடக்கியது என சிலபல புள்ளிவிவரங்களை அடுக்கிவிட்டு, விழுப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்ட டத்தைத் திறந்து வைத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பினார்.
முதல்வரின் இந்த விழாவில் பத்திரிகை, ஊடகத்தினருக்கு நிறைய கெடுபிடிகள் இருந்தன. ஆனால், மா.செ. குமரகுரு மகன் நமச்சிவாயம், அவரது குடும்பத்தினர், பணியாளர்கள் என ஒரு கூட்டமே மேடையை ஆக்கிரமித்திருந்தது. விழா அழைப்பிதழில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரிஷிவந்தியம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மக்களின் கோரிக்கைகளை மேடையில் எடுத்துச் சொல்லும் வகையில் தி.மு.க. தரப்பு பங்கேற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் வெளிப்பட்டது.
தனி மாவட்ட கோரிக்கைகளை யாரும் வைக்காமலே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிர்வாக வசதிக்காக கள்ளக் குறிச்சியை புதிய மாவட்ட மாக அறிவித்ததாக அமைச்சர் சண்முகம் மேடையில் பேசியதை, அங்கிருந்தவர்கள் ரசிக்கவில்லை. காரணம், “கடந்த 15 ஆண்டுகளாகவே வணிகர்கள், பொதுநல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராடிவருவதை நாங்கள் அறிவோம்'' என்கிறார்கள் பொதுமக்கள். புதிய மாவட்டப் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தலை தெம்பாக எதிர்கொள்ளும் எடப்பாடியின் எண்ணம் ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறது.