கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் காரசாரமாக நடப்பதோடு, பல மசோதாக்களையும் வேக வேகமாக நிறைவேற்ற எடப்பாடி அரசு திட்டம் போட்டிருந்தது. இந்த நிலையில், ஆங்கிலோ இந்தியருக்கான நியமன எம்.எல்.ஏ. பதவியை திடீர் என்று ரத்து செய்துள்ளனர். அதோடு உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தலை கொண்டுவர ஆளும்கட்சி முயற்சி செய்கிறது என்ற தகவலை முதன் முதலில் மக்கள் மத்தியில் போட்டுடைத்தது நம் நக்கீரன்தான். அதேபோல் இந்தக் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவை எடப்பாடி அரசு நிறைவேற்ற இருப்பதையும் நக்கீரன்தான் முன்பே கூறியிருந்தது. கடந்த 9ந் தேதி எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோதும் இதற்கான மசோதாவை பா.ஜ.க. பாணியிலேயே நிறைவேற்றி விட்டது எடப்பாடி அரசு.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு இருக்கும் ’செக்கில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து, அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என்ற ஆலோசனையில் எடப்பாடி இருக்கிறார் என்கின்றனர். தி.மு.க. அதிக இடங்களில் ஜெயித்திருப்பதால், அவர்களிடம் அதிகாரம் சென்று விடக்கூடாது என்று மறைமுக தேர்தலில் கவுன்சிலர்களிடம் ரகசிய டீலிங் செய்து அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.
அதே போல் என்னதான் எடப்பாடி இப்படியெல்லாம் சட்டத்தை வளைத்தாலும், மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டி ஊராட்சி உறுப்பினர் பார்வதி பதவியேற்கும்போது, "கடவுளறிய'ன்னு அலுவலர் சொன்னபோதும், கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன்னு சொன்னது அடிப்படை ஜனநாயக உரிமையை வெளிப்படுத்திய சம்பவம் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்.