வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து தமிழக அமைச்சர்களும் சென்றுள்ளனர். வெளிநாடு செல்வதற்கு முன்பு தனது பொறுப்புகளை யாரிடமும் எடப்பாடி பொறுப்பை கொடுத்து செல்லவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தனது முடிவில் உறுதியாக இருந்த எடப்பாடி பொறுப்பை யாரிடமும் கொடுக்கவில்லை. வெளிநாட்டில் எடப்பாடி இருந்தாலும் இன்று இருக்கும் தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் தமிழக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்ததாக சொல்லப்படுகிறது. அதே போல் கட்சியில் நடக்கும் அரசியல் பற்றி தனக்கு நெருக்கமான அமைச்சர்களான வேலுமணி மற்றும் தங்கமணியிடம் தினமும் தொடர்பு கொண்டு விசாரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
அதே போல் கட்சி நிர்வாகிகளும் ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் அமைச்சர் வேலுமணியை தொடர்பு கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் தெரிவிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சமீபத்தில், தேனியில் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தோடு கலந்துகொண்டவர் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் மட்டுமே கலந்து கொண்டுள்ளார் வேறு எந்த அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.
அந்த நேரத்தில் அமைச்சர் வேலுமணி மதுரையில் இருந்தாலும் ஓபிஎஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரோடு மழைநீர் சேகரிப்பு, குடிநீர் மராமத்து பணி ஆய்வுகளுக்காக மதுரையிலிருந்த வேலுமணியோடு சேர்ந்து அவர்களும் ஓபிஎஸ் விழாவிற்கு செல்லவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறுகின்றனர். எடப்பாடி இல்லாத நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணியை தொடர்பு கொண்டு அனைத்து கோரிக்கைகளையும் வைப்பதால் ஓபிஎஸ் தரப்பை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் உட்கட்சி பூசல் அதிமுகவில் அதிகமாக காணப்படுகிறது.