தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.