இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். இக்கருத்துகள் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பலத்த கண்டனங்களைப் பெற்று வருகின்றன.
ஆளுநர் கருத்து தெரிவித்த அன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இத்தீர்மானத்தை அரசின் தனித் தீர்மானமாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிய உள்ளார். பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா பற்றி பொது வெளியில் ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகள் ஆளுநர் பதவிக்கு ஏற்புடையது அல்ல என்றும் ஆளுநரின் செயல்பாடுகள் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப் படுத்தும் வகையில் உள்ளது. மசோதாக்களுக்கு மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும் தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் நாளை தீர்மானம் கொண்டுவரப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.