தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சென்னை மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக 1.50 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 8-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காததாலும், பணத்தைத் திருப்பி தந்து விட்டதாகக் குற்றம் சுமத்தியவர்கள் கூறியதாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதுதவிர செந்தில்பாலாஜி மீது மேலும் இரண்டு முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், அந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், முறைகேடான பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (11.08.21) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.