![Velachery 92nd polling station election campaign ..! Argument between DMK and AIADMK ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/XHoIpehFwc1ER9mSzsZ0OgylwkXuR86gZHxN2xuRCnM/1618470809/sites/default/files/2021-04/th-5_5.jpg)
![Velachery 92nd polling station election campaign ..! Argument between DMK and AIADMK ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/EH2vDBA5kuLFav1FwDVGIml4GTHVMx2_J9-UqrzXk5k/1618470809/sites/default/files/2021-04/th-3_6.jpg)
![Velachery 92nd polling station election campaign ..! Argument between DMK and AIADMK ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/tP8G1CkTsjlCRbOK7mhEgnX7XLivuEINV2QutAxuLgo/1618470809/sites/default/files/2021-04/th-4_5.jpg)
![Velachery 92nd polling station election campaign ..! Argument between DMK and AIADMK ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-AMjHCj-W-6b13LHr_Ekdy99mUJDpI95jOvzE95MtJ8/1618470809/sites/default/files/2021-04/th-1_9.jpg)
![Velachery 92nd polling station election campaign ..! Argument between DMK and AIADMK ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/iDI2hGOP_4nsQuQgISQkWf5SW71kHoal5giADdnf9I8/1618470809/sites/default/files/2021-04/th-2_6.jpg)
தமிழகத்தில் 6.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் சார்பில், முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் நடந்த தீவிர விசாரணையில், அந்த இயந்திரம் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் செயல்பாட்டில் இருந்ததும், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. அதனால் வேளச்சேரி தொகுதியில் அந்த 92வது வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வேளச்சேரி தொகுதி 92வது பூத்துக்கான தேர்தல் நாளை மறுநாள் (17.04.2021) நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 7 மணி வரை அங்கு வாக்கு சேகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி, அந்தப் பூத்துக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் அசோகனும், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹஸன் மௌலானாவை ஆதரித்து மா.சுப்ரமணியனும் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இதில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரிக்க குறிப்பிட்ட நேரத்தை தனித்தனியே காவல்துறையினர் ஒதுக்கியிருந்தனர். ஆனால், அதிமுகவினர் வாக்கு சேகரிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் திமுக கட்சியினரும் வந்ததால், அங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். பிறகு அதிமுக வேட்பாளரிடம், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பிரச்சாரத்திற்கு வந்த திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்; வழக்குப் பதிவு செய்வோம் என்று போலீசார் கூறியதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். ஆனால், திமுகவினருக்கு ஒதுக்கிய நேரத்தில்தான் அதிமுகவினர் வந்து பிரச்சாரம் செய்ததாக திமுக எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.