தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சாவர்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர். மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவுகள் வந்த வண்ணம் இருந்தன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் மல்யுத்த வீரர்களின் பேரணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படும் சூழலில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு டெல்லியில் நூற்றுக்கணக்கில் ஒரே நேரத்தில் நுழையும் போராட்டத்தை விவசாயிகளும் மல்யுத்த வீரர்களும் முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து மல்யுத்த வீரர்கள் கூறுகையில், பேரணியை அறிவித்த பின் அதை ரத்து செய்ய மிகுந்த அழுத்தம் தரப்படுகிறது. பேரணி நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பேரணியைத் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் ஆணிகளைக் கொட்டி வைத்தல், முள் வேலி அமைத்தல் போன்ற செயல்களைச் செய்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியின் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.