திருச்சி தில்லைநகர் பகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் திமுக தலைவர் ஸ்டாலின்தான் இறுதியாக முடிவெடுப்பார்” என்று கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர்களுக்கு முழுமையான விடுதலை குறித்த தீர்வு கிடைக்கும்” என்று கூறினார்.
மேலும் சசிகலாவும் திமுகவும் இணைய வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இன்று டிடிவி தினகரன் கொடுத்த அறிக்கையில் எக்காரணத்தைக் கொண்டும் திமுகவை மட்டும் வெற்றிபெற விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள் என்று ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது சசிகலா எப்படி எங்களோடு இணைவார் என்று பதிலளித்தார்”.
வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், திமுகவுடன் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதைத் தலைவர் தான் முடிவுசெய்ய வேண்டும்” என்று பதிலளித்தார்.
தற்போதுள்ள அரசு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை தமிழக மக்களுக்கு வழங்கி வருவதைக் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு, “அவர்களின் அதிகாரம் இன்னும் இருபது நாட்கள் தான் அதன்பிறகு, அவர்களால் எதையும் செய்யமுடியாது. எனவே வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி, தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அறிவிப்பு வெளியாகும் வரைதான் அவர்களுடைய அதிகாரமும் இருக்கும்” என்று தெரிவித்தார்.