Published on 20/06/2019 | Edited on 20/06/2019
பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அதிமுக கட்சி சார்பாக டெல்லிக்கு சென்ற சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த மோடி 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக இந்திய முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் டெல்லி சென்றார். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் சி.வி சண்முகத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதனால் அவர் தங்கள் கட்சி சார்பான மனுவை அளித்துவிட்டு திரும்பியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செல்லவில்லை என்று கூறுகின்றனர். இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.