
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஃபரூக் அப்துல்லாவை திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது ஒரு அற்புதமான ஆரம்பம். ஸ்டாலினும் திமுகவும் தேசத்தின் ஒற்றுமையைக் காண்பதில் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரல். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னெடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்த பின் பிரதமர் தேர்வு பற்றி முடிவு செய்யலாம்” என்றார்.