“ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். ஆனால் அவருக்குப் பின்னாலேயே எதிரிகள் இருந்துள்ளனர்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை என்றார். இறுதியில் அவர்களது எதிரிகள் எல்லாம் அவர்கள் பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப் பரவலுக்குமான அதிகாரக் குவியலுக்குமான வித்தியாசம்” என்றார்.