தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைப் போல சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. வாஷ் அவுட் ஆகிவிடும். அ.தி.மு.க.வில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாகவே கருதப்படுவார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறப் போகிறது. அ.தி.மு.க.வினருக்கு இதுதான் கடைசி சட்டமன்றம்; இனி அவர்கள் உள்ளே வரமுடியாது. ஓ.பி.எஸ். மகன் அதிமுக எம்.பி. அல்ல, அவர் பா.ஜ.க. எம்.பி.யாக செயல்படுகிறார். நான் உழைத்து வந்தவனா, இல்லையா என்பது தி.மு.க. தொண்டர்களுக்குத் தெரியும்" என்றார்.