Published on 11/11/2020 | Edited on 11/11/2020

கரோனா வைரஸ் தடுப்பு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, விருதுநகருக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மாவட்ட நிர்வாக ரீதியாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒரு பக்கம் வரவேற்றார். அமைச்சருக்கு எதிராக முறுக்கிக்கொண்டு தனித்து அரசியல் செய்துவரும் ராஜ வர்மன் எம்.எல்.ஏ., இன்னொரு இடத்தில் தனது ஆதரவாளர்களோடு நின்று வரவேற்பு அளித்தார்.
'எடப்பாடியே எங்கள் மாவட்டத்துக்கு வந்தாலும், கோஷ்டி அரசியல் கொடியை, அவர் கண்ணுக்கு நேராகவே பிடிப்போம்' என்ற சிலரது உறுதி, கட்சியின் பலவீனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
இவ்விருவரும் பிரிவினை அரசியல் செய்தாலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைத்திருந்த மேடைக்கு, எடப்பாடி வந்தபோது, தற்காலிகமாக ஒரே நேர்க்கோட்டில், அமைச்சரையும், எம்.எல்.ஏ.வையும் நிற்க வைத்துவிட்டது.