Skip to main content

தொகுதிப் பங்கீட்டில் ஏன் காலதாமதம்..? சுவாரசியமாக பதில் அளித்த முத்தரசன்

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

CPI Mutharasan answered to the question "Why the delay in seat allocation"
                                                            கோப்புப் படம்

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு வேலைகளை மும்முரமாக செய்துவருகின்றன. அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன், டி.ஆர்.பாலு தலைமையிலான குழு சென்னை அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், நேற்று (04/03/2021) மாலை, மீண்டும் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முத்தரசன், "தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை (05/03/2021) தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய ஏன் காலதாமதம்” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த முத்தரசன், “திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை. பொண்ணு வீடு பார்க்கப் போகிறோம், மீண்டும் மாப்பிள்ளை வீடு பார்க்க வருவார்கள். அடுத்தது நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும். திருமண தேதியைப் பிறகுதான் தீர்மானிக்க முடியும். உடனே தீர்மானிக்க முடியுமா” என்று சுவாரசியமாக பதில் அளித்தார். 

 

தற்போது வரை தி.மு.க. கூட்டணியில், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்