தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
இன்று (20.01.2021) காஞ்சிபுர மாவட்டம், வாலாஜாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பேசிய அவர், “தயாநிதிமாறன் தேர்தல் சமயத்தில்தான் வெளியே வருவார். அதன்பிறகு அவரைப் பார்க்க முடியுமா. ஜெகத்ரட்சகன் ஒன்று, இரண்டு அல்ல ரூ.25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். இது தமிழ்நாட்டில் போடப்படும் பட்ஜட்டில் எட்டில் ஒரு பாகம். அவ்வளவு சொத்தையும் பாதுகாப்பதற்காகவும், சொத்துக்குமேல் சொத்துக்களைக் குவிப்பதற்காகவும் அவர் பதவியைத் தேடி அலைகிறார்.
அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டன் முதல்வராக முடியும். தி.மு.க.வில் கலைஞர் முதல்வராக இருந்தார். அதன்பிறகு ஸ்டாலின் முதல்வராக வர துடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரால் வர முடியாது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின். வாழை மரத்தில் இடைக் கன்று முளையாவது போல் அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவராக முளைக்கிறார்கள். இன்று சாதரனமாக மக்களோடு மக்களாக வாழ்ந்துவருபவர், பதவிக்கு வந்தால்தான் மக்களின் கஷ்டங்கள் தெரியும். 1989-ல் ஸ்டாலின் அவரது அப்பாவின் செல்வாக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். நான் அதே ஆண்டு என் தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்றால் எப்படி உழைக்க வேண்டும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.
கலைஞர் இருந்த காலத்திலே தி.மு.க.வில் வாரிசு அரசியல்தான். அவர்களைத் தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது; விடவும் மாட்டார்கள். ஆனால் அதிமுகவில் யார் கட்சிக்கு உழைக்கிறார்களோ, யார் மக்களுக்காக பாடுபடுகிறார்களோ, யார் தலைமைக்கு விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்கூட முதல்வராக முடியும். அதற்கு நானே உதாரணம். தற்போது ஸ்டாலின், 27ஆம் தேதிக்கு மேல் எனது ஆட்சி இருக்காது எனப் பேசுகிறார். ஆனால் 27க்கு பிறகும் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்” என்று பேசினார்.