Skip to main content

அவசர நிர்வாகக் குழு கூட்டம்! அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகுகிறதா..?

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

ADMK PMK meeting with their party members


பா.ம.க.வின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கடந்த 31ஆம் தேதி கூடிய நிலையில், நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தை வருகிற 9ஆம் தேதி இணைய வழியில் நடத்துகிறார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்தக் கூட்டத்தில் இட ஒதுக்கீடு மற்றும் கூட்டணி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருப்பதாக பா.ம.க. தரப்பில் சொல்லப்படுகிறது.  டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார்.


அ.தி.மு.க.வின் பொதுக்குழு ஜனவரி 9ஆம் தேதி நடக்கும் நிலையில், அதே 9ஆம் தேதி பா.ம.க.வின் அவசர நிர்வாகக் குழுவினை டாக்டர் ராமதாஸ் கூட்டியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


கடந்த 31ஆம் தேதி கூடிய பா.ம.க. பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், “வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றத் தவறினால், இட ஒதுக்கீடு கோரிக்கையின் அடுத்த கட்டப் போராட்டம் என் தலைமையில் நடக்கும். அந்தப் போராட்டத்தை தமிழகம் தாங்காது” என்று அழுத்தமாகப் பேசியிருந்தார்.


இப்படிப்பட்ட சூழலில்தான் அவசர நிர்வாகக் குழுவைக் கூட்டியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். “தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த ராமதாஸின் கோரிக்கையை எடப்பாடி ஏற்காத நிலையில், இட ஒதுக்கீடு கோரிக்கையும் நிறைவேற்றப்படாது போனால், அ.தி.மு.க. கூட்டணியை ராமதாஸ் மறு பரிசீலனை செய்வார்” என்கின்றனர் பா.ம.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்