இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
8 ஆவது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. பிப்ரவரி 26 வரை நடக்கும் இந்தப் போட்டியில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. பிரிவு ‘ஏ’ வில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என ஐந்து அணிகளும் பிரிவு ‘பி’ யில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து என ஐந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று பார்ல் நகரில் இரண்டு லீக் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன. இரவு 10.30 மணியளவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்து அணிகளும் மோத உள்ளன. நாளை நடக்கும் போட்டியில் இந்தியா தன் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா காயத்திலிருந்து இன்னும் மீளாத காரணத்தினால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஸ்மிருதி மந்தனா வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மந்தனா டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2021 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். 5 ஆட்டங்களில் 235 ரன்களை குவித்தார்.
அதேபோல் 2022 டி20 உலகக் கோப்பையிலும் மந்தனா சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அந்த தொடரில் 6 இன்னிங்ஸ்கள் ஆடி 38 ரன்கள் சராசரி உடனும் 144 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடி 228 ரன்களை எடுத்தார். விரைவாக ரன்களை அடிக்கும் திறமையால், மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் இந்திய அணியின் மிகப் பெரிய பலமாக இருந்தார். எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மந்தனா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்.