அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழலில் எடப்பாடி அணி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை நியமித்திருந்தது. அதேபோல் ஓபிஎஸ் சார்பில் மாவட்டச் செயலாளர்களும், எடப்பாடி சார்பில் மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
அண்மையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் விரைவில் நடைபெறும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி. தினகரனை சந்திப்பேன்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளை பிற்பகல் 12.45 மணிக்கு அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.