Skip to main content

“தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்” - திருமாவளவன்

Published on 05/03/2023 | Edited on 05/03/2023

 

"People from Tamil Nadu are also migrants"- Thirumavalavan

 

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். அவர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்த அரசில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். அத்துடன், முதலமைச்சருக்கு இந்திய அளவில் அவப்பெயரை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.

 

ஒருபுறம் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது, இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இலட்சக் கணக்கானவர்கள் பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 19 (1) (d) அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் தடையின்றிச் செல்வதற்கும் உரிமை வழங்கியுள்ளது. 19(1) (e) இந்திய குடிமக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று குடியிருப்பதற்கு உரிமை வழங்குகிறது. இவை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

 

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கிறவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4% மட்டுமே ஆவர். உலக நாடுகளை ஒப்பிடும்போது மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்வோர் இந்தியாவில் மிகவும் குறைவு என உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1979 ஆம் ஆண்டு 'மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம்' இயற்றப்பட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். அவர்களை அழைத்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நியாயமான கூலி மற்றும் சுகாதார வசதிகளையும், அந்தத் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி வசதியையும் அந்த ஒப்பந்ததாரர் செய்து தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரமும் வரம்பற்றதாக உள்ளது. அவர்கள் கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோல சுகாதாரமற்ற சூழலில் வைத்து வேலை வாங்குகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்